

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம். குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.
குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...? அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...? வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?
படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...? மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...? கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு. தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.
குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்! எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.
சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான். ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?
குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.
குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.
பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!
நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி
1. இறை அச்சம்
2. வெட்கம் [நாணம்]
இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில் நம்தந்தை ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.
இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்தத் தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.
இந்த இரண்டுமே பலவீனமாக உள்ள மனிதர்கள் தவறு செய்ய யோசிக்கமாட்டார்கள். அதுக்கு உதாரணமாக இன்றைய அரசியல்வாதிகளைச் சொல்லலாம். மக்களின் பொதுப்பணத்தை சுருட்டுகிறார்கள்; அதற்காக கைது செய்யப்படும்போது கொஞ்சம் கூட வெட்கமின்றி, தியாகிபோல கையசைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏறுகிறார்கள். அதுபோல நேற்றுவரை ஒரு தலைவரை தாறுமாறாக விமர்சித்துவிட்டு மறுநாளே, அந்த தலைவருக்குப் பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டுகிறார்கள். நம்முடைய இந்தச் செயலைப் பார்த்து மக்கள் எள்ளிநகையாடுவார்களே என்ற வெட்கம் இவர்களுக்கு இருப்பதில்லை. இதில் வேதனை என்னவெனில், முஸ்லீம் அமைப்புகளும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் அங்கம் வகிக்கிறார்களோ அந்த அணியில் தலைவருக்கு ஆதரவாக, எதிரணி தலைவரைச் சாடுவதும் பின்பு இந்த அணிக்கு வந்தவுடன் அந்த அணியைச் சாடுவதுமாக சராசரி அரசியல்வாதிகளாக வலம்வருவதற்கு காரணம் வெட்கமின்மைதான். இப்படிப் பட்டவர்களை பற்றித்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
"மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பது" என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)
வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்
ஈமான் [இறை நம்பிக்கை] என்றால் நாம் என்ன விளங்கியிருக்கிறோம் என்றால், ஆறு அடிப்படையான விசயங்களை நம்பினால் போதும். அதாவது, அல்லாஹ்வை, மலக்குகளை, வேதங்களை, நபிமார்களை, மறுமையை,விதியை நம்பினால் போதும் நாம் பரிபூரண முஸ்லீம் என்று. ஆனால் இந்த ஆறு விஷயங்களும் மரத்தின் ஆணிவேர் போன்றது, முழுமையான ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:
"ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்". (நூல்: புஹாரி, எண் 9.)
ஒரு மரம் வெறுமனே அதன் அடிப்பகுதியோடு நின்றால் அதைப் பசுமையான மரம் என்று சொல்லமாட்டோம். ஆனால் பல்வேறு கிளைகளுடனும் இலைகளுடனும் காட்சிதரும் மரத்தைத்தான் பசுமையான மரம் என்போம். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய ஈமான் என்ற மரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான ஈமானாகும்.
ஆதிமனிதரும் நபியும் நம்தந்தையுமான ஆதம் மற்றும் ஹவ்வா[அலை]ஆகியோரின் வெட்கம்
فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு, "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]
ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியான ஆதம்[அலை], ஹவ்வா[அலை] இருவரும் இறைவன் தடுத்த மரத்தின் கனியைப் புசித்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டவுடன் இருவரும் தம்பதியர் என்றபோதிலும் அவர்கள் தங்களுக்குள் மறைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்ற போதிலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்றால், இன்று நம்சமுதாய பெண்களில் சிலர் கணவர் மட்டும் காணவேண்டிய அழகை கடைவிரிப்பது போன்று, பர்தா அணியாமல் கண்ணாடிபோன்ற சேலைகளை அணிந்து கொண்டு வலம்வருவதும் அதை தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கணவனோ, அல்லது பெற்றோரோ 'நாகரீகம்' என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் வெட்கமின்மைதானே!
சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வரும் நடிகைகளை ரசிப்பதும் அத்தகைய ஆபாச காட்சிகளை மனைவி,மக்கள் சகிதமாக கண்டுகளிப்பதும் வெட்கமின்மைதானே!
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31]
இந்த வசனத்தின் அடிப்படையில் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டிய முஸ்லீம் பெண்களில் சிலர், இறை கட்டளையை புறக்கணித்து, மச்சான் என்றும் கொழுந்தன் என்றும் குடும்ப நபர் என்றும் நெருங்கிய உறவினர் என்றும் சகஜமாக இவர்கள் முன்னால் சாதாரணமாக வலம்வருவதும் கேலிசெய்து விளையாடுவதும் வெட்கமின்மைதானே! ரசூல்[ஸல்] அவர்கள், அந்நிய பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியவுடன் சகாபாக்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய சகோதரன் வரலாமா?' என வினவ 'நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா?' என்று கேட்டார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸில் பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதரின் இந்தக் கட்டளை நடைமுறையில் இல்லாததால் பல்வேறு குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதையும் பார்க்கிறோம். இனியேனும் உறவுகள் விஷயத்தில் ஆணாயினும் பெண்ணாயினும் கவனம் செலுத்தி தங்களைப் பேணிக்கொள்வது சிறந்தது.
ரசூல்[ஸல்] அவர்களின் வெட்கம்
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்: "நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்." ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, "நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (நூல்:புஹாரி,எண் 3562)
சகாபாக்களின் வெட்கம்
"அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 24.)
ரசூல்[ஸல்] அவர்களிடத்திலும், சகாபாக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.
மார்க்கத்தை அறிய வெட்கப்பட கூடாது
"உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 130.)
நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் வெட்கப்படவேண்டிய விஷயத்தில் வெட்கப்படமாட்டார்கள். ஆனால், மார்க்கவிஷயத்தில் ஆலிம்ஸாவிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமேனில் வெட்கப்படுவார்கள். மிகப்பெரிய ஆலிம்ஸாவான ரசூல்[ஸல்]அவர்களிடம் ஒரு பெண்மணி 'பெண்மை' சம்மந்தமான கேள்வியைக் கேட்டுள்ளார்கள் எனில், நம்மில் சிலர் குர்'ஆன் ஓததெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குர்'ஆனை கற்றுக்கொள்ளவேண்டியது தானே என்றால், இந்த வயசுல போயி குர்'ஆனை கத்துதாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெக்கமாயிருக்கு என்பார்கள். ஆனால் இந்த வயசிலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.
எனவே மார்க்கத்தை கற்பது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்படவேண்டும். அந்த வெட்க உணர்வும் இறையச்சமும்தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.
ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.
இஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றைத் தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே 'ஹதீஸ்' என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.
3. நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா?
நபியவர்களின் பெயரை எழுதும்போது "ஸல்" என்று சேர்த்து எழுதுவது வழக்கம். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதன் சுருக்கமே 'ஸல்' என்பது. "நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக" என்பது அதன் பொருள்.
4. நாயகம் தந்தத் திருமணப்பரிசு எது?
தன் மகள் ஃபாத்திமாவின் திருமணத்தின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தத் திருமணப்பரிசு, தண்ணீர் எடுத்து வரும் தோல்பை, ஒரு குவளை, ஈச்சப்பாயால் பின்னப்பட்ட ஒரு கட்டில், இரண்டு தலையணை, வெள்ளி வளையல், ஒரு மாவரைக்கும் திருகை.
5. உலகின் உயரமான பள்ளிவாசல் எது?
மொராக்கோ நாட்டில், காஸாபிளாங்கா என்ற இடத்தில் 'கிரேமஹசன்' என்னும் மசூதி உள்ளது. உலகில் உள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரமானது இதுதான். சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டது. மினாராவின் உயரம் 576 அடி. இது 1993-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அநேகமாக இதுதான் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.
6. தானாகப் பக்கங்களைப் புரட்டிக் கொள்ளும் குர்ஆன் எங்கேயுள்ளது?
இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய குர்ஆன். கை விரல்கள் பட்டதும் தானாக பக்கங்கள் புரளக்கூடிய அளவிற்கு இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த நவீன தொழில்நுட்பக் குர்ஆன் வைக்கப்பட்டுள்ளது.
7. மிகச்சிறிய திருக்குர்ஆன் யாரிடமுள்ளது?
குன்னூரில் வசிக்கும் டாக்ஸி டிரைவர் சிராஜுத்தீன் என்பவரிடம் 40 ஆண்டுகளுக்குமுன் தயார் செய்யப்பட்ட மிகச்சிறிய குர்ஆன் உள்ளது. இக் குர்ஆனை சிராஜுதீன் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறார். இதன் உயரம் கால் செ.மீ மீட்டர், அகலம் 2 செ.மீ., நீளம் 2 3/4 செ.மீ. இதில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 428 எழுத்துக்கள் உள்ளன. 'பே' என்ற அரபு மொழிச்சொல் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 428 முறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 430 வார்த்தைகள் உள்ளன. இறைக் கோட்பாடுகள் மட்டும் 6 ஆயிரத்து 666 உள்ளன. இதில் பதிவாகியுள்ள எழுத்துக்களை வாசிக்க லென்ஸ் தேவைப்படும்.
8. அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?
1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.
2.சூனியம் செய்வது.
3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலைசெய்வது.
4.வட்டியை உண்பது.
5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.
7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
9. நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகள் எவை?
1.தூய்மை, அவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.
2.எளிமை, அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.
3.பொறுமை, எத்தகைய இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்குக் காட்டியது.
இம்மூன்றும் நாயகம்(ஸல்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும்
அணிகலனாக விளங்கியது.
10. சுவனம் செல்ல தகுதியானவர்கள் யார் தெரியுமா?
1. "எவர் மூன்று பெண் மக்களையோ அல்லது மூன்று சகோதரிகளையோ அல்லது இரண்டு பெண் மக்களையோ வளர்த்து (அறிவையும்)
நல்லொழுக்கத்தையும் கற்பித்து அவர்களுடன் அழகிய முறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனரோ அவர்களுக்கு
சுவனம் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி:அபுஸஈத்(ரலி) ஆதாரம் : திர்மிதீ
2. "பெருமை, மோசம், கடன் ஆகிய இம்மூன்றை விட்டும் எவர் அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இறந்து விடுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி :ஸவ்பான் (ரலி) ஆதாரம் : திர்மிதீ
11. மறுமை நாளில் அல்லாஹ் நோக்காதவர்கள் எவர் தெரியுமா?
"மூன்று விதமான நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்கம் அல்லாஹ் மறுமை நாளில் நோக்க மாட்டான்" என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
1. பெற்றோருக்கு மாறு செய்பவன்.
2. ஆண் உடையை அணியும் பெண்.
3. ரோஷமும், சொரணையும் அற்றவன். அறிவிப்பாளர் :இப்னு உமர் (ரலி) ஆதாரம்: நஸாயி.
12. பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை?
1. திருக்குர் ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொள்ளுங்கள்.
2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.
5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.
7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.
13. நரகவாசிகள் யார்?
"தொழுகையை வீணடிப்பவர்களுக்கு நரகம்தான் என்று அல்லாஹ் கூறுகின்றான். உங்களை "ஸகர்" என்னும் நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள்" (அதற்கு)தொழுபவர்களில்(உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை" என்று அவர்கள் கூறுவார்கள். அல்குர் ஆன் 74;42,43.
எனவே "உங்கள் குழந்தைகள் ஏழு வயது அடைந்துவிட்டால் தொழச் சொல்லுங்கள். பத்து வயது அடைந்ததும் (அவர்கள் தொழாமல் இருந்தால்) அவர்களை அடியுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அம்ருபின் ஷீஐபு(ரலி). ஆதாரம்: அஹமத், அபுதாவூத்.
14. ஆஷுரா நாளின் நன்மைகளில் இன்னும் ஒன்று!
"எவர் ஆஷுரா நாள் அன்று தம் குடும்பத்தாருக்குத் தாராளமாக செலவு செய்கின்றாரோ அவருக்கு இறைவன் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி (வருமானம்) அளிக்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி).
15. திருக்குர் ஆன் படம் பிடுத்துக்காட்டும் மனிதர்களின் தீய குணங்கள் எவை?
1. தற்பெருமை கொள்ளுதல். 2. பிறரை கொடுமை செய்தல். 3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல். 5. பொய் பேசுதல். 6. கெட்ட சொற்களைப் பேசுதல். 6. நல்லவர்களைப் போல் நடித்தல். 7. புறம் பேசுதல். 8. பாரபட்சமாக நடத்துதல். 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. வாக்குறுதியை மீறல். 11. பொய் சாட்சி கூறுதல். 12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல். 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல். 14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல். 15. குறை கூறுதல். 16. வதந்தி பரப்புதல். 17. கோள் சொல்லுதல். 18. பொறாமைப்படுதல் 20. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல். 21. கோபப்படுதல்.
தொகுப்பு: சகோதரி. ஆர். நூர்ஜஹான் ரஹிம். (கல்லை)