Wednesday, November 30, 2011

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும் என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை.

மனாருல்ஹுதா

நபி வழி என்றால் என்ன?

நபி வழி என்றால் என்ன?
நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

நபி வழிக்கு அரபியில் ''சுன்னத்'' என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ''வழி'' என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ''சுன்னத்'' என்று சொல்லப்படுகிறது. இவைகளுக்கு ''ஹதீஸ்'' என்று ஒரு மறு பெயர் சொல்லப்படுவதுண்டு, என்றாலும் 'சுன்னத்' என்ற சொல்லிற்கும், 'ஹதீஸ்' என்ற சொல்லிற்குமிடையில் சிறு வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக ''தனக்கென எதை விரும்புகிறானோ, அதை தனது சகோதரனுக்கும் விரும்பாதது வரை ஒருவன் உண்மை விசுவாசியாகமாட்டான்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி
(ஸல்) அவர்கள் ''சொன்னதாக'' அவர்களைப் பற்றி அறிவிக்கப்பtடுள்ள இந்தச் செய்திக்கு ''ஹதீஸ்'' என்று சொல்லப்படும். இந்தச் செய்தி மூலமாக நமக்குக் கிடைக்கின்ற விஷயம் இருக்கிறதே அது ''சுன்னத்'' அதாவது தனக்கென விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் ஒருவன் விரும்பும்போது நபி(ஸல்) அவர்களின் "சுன்னத்தை" செயல் வடிவில் பின்பற்றியவனாக ஆகிவிடுகின்றான்.

இதுதான் ''ஹதீஸ்'' என்ற சொல்லுக்கும் ''சுன்னத்'' என்ற சொல்லுக்குமிடையிலுள்ள ஒரு சிறு வேறுபாடு. இவ்விரு சொல்லும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் என்று சொல்லிக் கொண்டாலும், நன்கு சிந்தித்துப் பார்த்தால் அவ்விரு சொற்களுக்குமிடையில் சிறு வேறுபாடு இருப்பதை உணர முடியும்.

நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்
சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) ஷரீயத் சட்ட விளக்கங்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் விளக்கங்களை நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். குர்ஆனை பொறுத்தவரையில் அதிலுள்ள பல வசனங்கள் சுருக்கமானவையாக இருக்கின்றன. உதாரணமாக தொழுகையை எடுத்துக்கொள்வோம், குர்ஆனில் தொழுமாறு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படித் தொழவேண்டும், எந்தெந்த நேரங்களில் தொழ வேண்டுமென்ற விரிவான விளக்கம் அதில் இல்லை. இதுபோன்ற விரிவான, தெளிவான விளக்கங்களை நபித்தோழர்கள் நபி
(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுத் தெரிந்து கொண்டார்கள். இவ்வாறே அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குரிய சட்டங்களைக் குர்ஆனிலிருந்து பெற முடியாதபோது அவற்றின் விளக்கங்களை நபி(ஸல்) அவர்கள் விளக்கிக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் குர்ஆனை மக்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்காகவே நபி(ஸல்)அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)

(நபியே) மேலும் அவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம். (அல்குர்ஆன் 16:64)

தமது ஒவ்வொரு மார்க்கப் பிரச்சனைக்கும், நபி
(ஸல்) அவர்களை தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக ஆக்கிக் கொள்ளாதவரை நாம் ஒருபோதும் உண்மை விசுவாசிகளாக ஆக முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

(நபியே) உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

மார்க்க சம்பந்தமான எந்தப் பிரச்சனையானாலும் அதனை நபி
(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயரிலேயே மக்களுக்கு அறிவிக்கிறார்களே தவிர சுயமாக எதையும் அவர்கள் சொல்வதில்லை.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான், அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

இவ்வசனத்தின் ஞானம் (ஹிக்மத்) என்று சொல்லப்பட்டிருப்பது ''சுன்னத்'' என்னும் நபி வழியேயாகும் என குர்ஆன் விளக்கவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் ஒரு ஹதீஸில் ''நான் வேதமும் கொடுக்கப்பட்டுள்ளேன், அதைப்போன்று ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அதைப்போன்று ஒன்று என்பதின் பொருள் ''சுன்னத்'' என்னும் நபி வழியான குர்ஆனின் விளக்கமாகும் என அனைத்து ஹதீஸ் விரிவுரையாளர்களும் கருத்து கொண்டுள்ளனர்.

''உங்களிடம் ஹதீஸ் வருமானால் அதை குர்ஆனோடு ஒப்பிட்டு சரி பாருங்கள். குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக இருக்குமானால் அதை விட்டு விடுங்கள்'' என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது புனையப்பட்ட தவறான ஹதீஸாகும். இதற்கு ஹதீஸ் நூல்கள் எதிலும் ஆதாரமில்லை. (ஷரஹ் சுனன் அபூதாவூத்)

நபி வழியை முற்றிலும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வசனங்கள் உள்ளன அவற்றில் சில:

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

நபி வழியை புறக்கணிப்பவனின் கதி
நபிவழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனையை அல்லாஹ் பின்வரும் வசங்களில் தெளிவுபடுத்துகிறான்.

எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:32)

''அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்" என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 24:47)

மேற்கூறப்பட்ட வசனங்கள் நபிவழியை பின்பற்றுவதின் அவசியத்தையும், பின்பற்றாதவனுக்கு தண்டனையையும் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

இந்த அடிப்படையில் சஹாபாக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவதற்காகவும், குர்ஆனின் சட்ட திட்டங்களுக்குரிய தெளிவைப் பெறுவதற்காகவும் நபி(ஸல்) அவர்களை நாடவேண்டிய அவசியம் இருந்தது. அப்பொழுதெல்லாம் சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் சென்று, தங்கள் பிரச்னைக்குரிய தீர்ப்பைப் பெற்று, அப்படியே அதைக் கடைபிடித்தும் வந்தார்கள். வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் இவை அனைத்திலும் நபி வழியை அப்படியே கடைபிடித்தார்கள்.

"என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி

நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறைவேற்ற கண்டீர்களோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அதற்கொப்ப நபித்தோழர்களும் அப்படியே செயல்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் நபிவழியைப் பின்பற்றத் தயங்கிய சில தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்.

ஒரு சஹாபி தன் மனைவியை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி நோன்பாளி தனது மனைவியை முத்தமிடுவதன் சட்டத்தைப்பற்றி கேட்டு வரும்படி அனுப்பி வைத்தார். அப்பெண்மணி நபி(ஸல்) அவர்களது மனைவி உம்முஸலமா (ரழி)யிடம் சென்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கையில் தங்கள் மனைவியை முத்தமிடுவார்கள் என்று சொன்னார்கள். இதை அப்பெண்மணி தனது கணவனிடத்தில் சொன்னபோது "நான் ரசூலுல்லாஹ்வைப் போன்றல்ல. அல்லாஹ் தனது ரசூலுக்கு அவன் நாடியதை ஹலாலாக்கிக் கொடுப்பான்" என்று சொன்னார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் கோபமடைந்தவர்களாக "உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வை மிக அஞ்சக்கூடியவனும் உங்களையெல்லாம் விட அவனது சட்டங்களை அதிகம் தெரிந்தவனுமாக இருக்கிறேன்" என்று சொன்னார்கள். (முஸ்லிம்)

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு


புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.


ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா டெல்லி பிரகடனத்தைவாசித்தார்.

தேங்க்ஸ் டு : www.thoothuonline.com

கேரள அரசு பீதி கிளப்ப காரணம் என்ன


முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

கேரளாவின் தகிடுதத்தம்:கடந்த 2006 பிப்ரவரியில் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில், மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன், கேரள காங்கிரஸ் அரசு, அவசரமாக சட்டசபையை கூட்டி, இந்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை நடந்து, தீர்ப்பு வெளிவர இருந்த நிலையில், பல்வேறு முறையீடுகளை கேரளா செய்து, அடுத்தடுத்த பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வைத்தது.இறுதியில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து, அதில், இரு மாநில அரசுகளும், தங்களது நியாயங்களைக் கூறி, ஒரு முடிவெடுக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்தக் குழுவில், கேரளா தரப்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், தமிழகத்தின் தரப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, பல கட்டங்களாக கூடி விவாதித்து வந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை, கேரள அரசு தாக்கல் செய்தது.


தமிழகத்துக்கு சாதகமான நிலை:இந்த குழுவிலும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையிலும், அணைக்கு ஆபத்து இருப்பதற்கான எவ்வித ஆதாரத்தையும், கேரள அரசு சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் ரீதியான ஆய்வுகள் போன்றவற்றின் முடிவுகளையும் கேட்கத் தயாராக இல்லை. அதேசமயம், அனைத்து ஆய்வுகளுக்கும் ஒத்துழைக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்கும் தயாராகவே தமிழகம் இருந்து வந்துள்ளது.இது போன்ற செயல்கள், இக்குழுவுக்கு கேரளா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குழுவின் இறுதிக்கட்ட கூட்டம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இக்கூட்டத்துக்குப் பின், தனது முடிவுரையை அறிக்கையாக, இக்குழுவின் தலைவர் ஆனந்த், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில், விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வழங்க உள்ளது.தற்போதைய நிலையில், குழுவினரின் எண்ணம், தமிழகத்துக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீப காலமாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள், வேறு உத்தியை கையாளத் துவங்கியுள்ளன.

பீதியை கிளப்பும் பிரசாரம்:முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதாகவும், அதன் மூலம் தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் வழங்க இருப்பதாகவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரை சந்தித்து, இவ்விஷயத்தில் தமிழகத்துடன் மத்தியஸ்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.சிறிய அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை காரணம் காட்டி, முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், "டேம் 999' என்ற திரைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பீதியை ஏற்படுத்த, முயற்சிகள் நடந்துள்ளன.இது தவிர, ஆங்கில "டிவி' சேனல்களில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம், முல்லை பெரியாறு அணை குறித்து, தவறான செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.கேரளா முழுவதும், தமிழகத்துக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நான்கு மாவட்டங்களில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மலையாள திரைப்பட நடிகைகள், நடிகர்களது பேட்டிகள் மூலம், அணைக்கு எதிரான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.

பொறுத்தது போதும்:இவ்வளவுக்கும் காரணம், வரும் 5ம் தேதி நடக்கவுள்ள கூட்டம் தான். அதில் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், மத்திய அரசு, மக்கள் என, அனைவர் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வேலையில், கேரளா ஈடுபட்டுள்ளது.இந்த பிரசாரத்தை, தமிழக அரசு முறியடிக்க, பதில் பிரசாரம் செய்தாக வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டு, தென் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும் நிலை ஏற்படும்.

அணை உடைந்தால் ஆபத்து ஏற்படுமா?முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது.
தற்போதைய நிலையில், முல்லை பெரியாறில், 136 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவே, 10 டி.எம்.சி., தான். இதில் தண்ணீர் வெளியேற வேண்டுமென்றால், 106 அடிக்கு மேல், 136 அடிக்கு கீழ் உள்ள தண்ணீர் தான் வெளியேற முடியும். அணை உடைந்தாலும், இந்த தண்ணீர் தான் வெளியேறும். எனவே, வெளியேறப் போவது 6 டி.எம்.சி., தண்ணீர் தான்.

"இடுக்கி'யையும் விடவில்லை : அப்படி வெளியேறினாலும், அந்த தண்ணீர் நேராக இடுக்கி அணைக்கு தான் செல்லும். முல்லை பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில், 1979ல், கேரள மின் வாரியத்தால் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை. நீர்மின் நிலையத்துக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை, 70 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளளவு கொண்டது. எனவே, முல்லை பெரியாறு அணை உடைந்தாலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இந்த விவரங்களை, கேரள அரசு முதலில் மறைத்து வந்தது. இவை எல்லாம், வழக்கு விசாரணையின் போது தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, "இடுக்கி அணையே உடைந்துவிடும்' என்ற, புதிய பிரசாரத்தை கேரளா துவக்கியுள்ளது.மேலும், முல்லை பெரியாறு அணை என்பது, மற்ற அணைகளை போல, மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுவது அல்ல. அந்த அணையில் உள்ள தண்ணீரை, மிகப் பெரிய குழாய்கள் மூலம் தான், தமிழகம் எடுத்து வருகிறது. இதனால், அணை உடைந்தால், நான்கு மாவட்டங்கள் அழிந்துவிடும் என்ற வாதத்துக்கே இடமில்லை.அவ்வாறு நடக்க வாய்ப்பு இருந்தால், அதற்கான ஆதாரங்களை, சுப்ரீம் கோர்ட்டில், கேரளா தாக்கல் செய்யலாம். ஆனால், அவ்வாறு எதையும் செய்யாமல், பிரதமரை சந்திப்பது, பீதியை கிளப்பும் பிரசாரங்களை மேற்கொள்வது, கடையடைப்பு நடத்துவது என மிரட்டி வருவது, இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

'என் மகள்களின் மூன்று கேள்விகள்' - Lauren Booth


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்
பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது.

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை.
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை.
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான்.

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'.

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'.

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'.

'இனியும் புகைபிடிப்பீர்களா?'

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது.

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'.

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள்.

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link