Tuesday, December 13, 2011
அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்
மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை
கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன
போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்
(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)
Wednesday, December 7, 2011
எகிறியது டாலர், சரிகிறது ரூபாய் இறக்குமதிகளுக்கு விழுந்தது அடி
உலகமயமாக்கலில் ஒரு நாட்டை சார்ந்துதான் மற்றொரு நாடு இருக்கிறது. இதனால்தான் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளா£ர வீழ்ச்சி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையும் ஐரோப்பிய யூனியனின் கடன் பிரச்னையும் உலகம் முழுவதும் மற்ற கரன்சிகளின் மதிப்பில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கரன்சி மார்க்கெட்டில் முதலீட்டாளர்கள் அனைவரும் லாபம் கருதி டாலர்களை வாங்கிக் குவிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு டாலருக்கு ஸி52.73 ஆகக் குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் ஸி58 வரை குறையும் என எச்எஸ்பிசி வங்கி எச்சரித்துள்ளது.
ரூபாயின் மதிப்பு குறைய இது மட்டும் காரணமல்ல. பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. உள்நாட்டு உற்பத்தியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பங்குச் சந்தையோ பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே போகிறது. கண்ணுக்கு தெரிந்து இந்திய பொருளாதாரத்தில் நல்ல விஷயங்கள் எதுவும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான லாபம் தரக் கூடிய டாலரில் முதலீடு செய்கின்றனர். இந்திய ரூபாயை கொடுத்து டாலர்களை அதிக அளவில் வாங்குவதால் டாலருக்கு கிராக்கி ஏற்படுகிறது. இதனால் டாலர் மதிப்பு அதிகரிக்கிறது. அதன்பிறகும் டாலர் வாங்குவது குறையாமல் தொடர்ந்தால், டாலரின் மதிப்பு ஏறிக் கொண்டே போகும். ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போகும். எப்போதெல்லாம் ரூபாய் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி களத்தில் குதிக்கும். தன்னிடம் இருக்கும் டாலர்களை விற்க ஆரம்பிக்கும். டாலர் புழக்கம் அதிகரிக்கும்போது, ரூபாய் மதிப்பு சரிவது நிற்கும¢. ஆனால் இந்தமுறை ரிசர்வ் வங்கி தலையிட்டும் ரூபாய் மதிப்பு சரிவது நிற்கவில்லை. அந்த அளவுக்கு டாலருக்கான தேவை அதிகரித்ததுதான் காரணம்.
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடுவது வழக்கம். வாங்கிய பங்குகள் அனைத்தையும் விற்று டாலராக மாற்றிக் கொள்ளும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் முதலீடு செய்யும். இதை எதிர்பார்த்து இந்திய முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பங்குகளை வாங்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனையை ஆரம்பித்து விட்டன. இந்த மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரே வாரத்தில் ஸி3,661 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்றுள்ளன. இதையெல்லாம் டாலர்களாக மாற்றும்போது, டாலருக்கு தேவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பங்குச் சந்தையின் செயல்பாடு எதிர்பார்த்த லாபத்தை தருமா என்ற சந்தேகத்தில் இந்திய நிறுவனங்களும¢ பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் பங்குகள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். அதனால்தான் பங்குச் சந்தையும் அடி வாங்கி வருகிறது.
இந்தியாவை பொருத்தவரை ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். அதிகம் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 70 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்த இறக்குமதிக்கு டாலரில்தான் பணம் செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கர சரிவை சந்தித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல், இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் நிறுவனங்களின் லாபம் பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் விலை உயர்வாலும் கடுமையான போட்டியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் மேலும் குறையும். உதாரணமாக ஸ்கோடா, வோக்ஸ்வாகன், ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் சொகுசு கார்களின் இன்ஜின் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, கார் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். ஆனால் போட்டி காரணமாக விலையை உயர்த்த முடியாது. இதனால் லாபம் அடிபடும். இறக்குமதிக்கு சமமாக கார் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். மாருதி, ஹுண்டாய், நிசான், ஃபோர்டு நிறுவனங்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஏனெனில் இவை அதிக அளவில் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் மின்னுற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை அதிகம் பாதிக்கப்படும் அதே நேரத்தில், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் காட்டில் அடை மழைதான். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷத்தில் உள்ளன. டாலர்களில் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களைப் பொருத்தவரை இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் மிகப் பெரிய சந்தை. வருமானத்தில் பெரும்பகுதி டாலர்களில்தான் வருகிறது. எனவே ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷமாக உள்ளன. நிறுவனங்களின் லாபம் அதிகரித்து பங்கு விலை உயர வாய்ப்புள்ளதால், ஐ.டி. பங்குகளில் முதலீடும் அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொண்டாட்டம்
கேரளாவை பொருத்தவரை வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அந்த மாநில மக்களும், ஏற்றுமதியும்தான் வருமானமே. இந்த இரண்டுமே ரூபாய் மதிப்பு சரிவால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கேரள மாநிலத்தை சேர்ந்த 21 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மாதாமாதம் தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். ரூபாய் மதிப்பு சரிவால் அவர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு நறுமணப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், முந்திரி, நார்பொருட்களுக்கும் ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல விலை கிடைத்து வருகிறது.
மறுமை வாழ்வு – ஒரு தெளிவு - அப்துல் சமத்
ஆராய்ச்சி பகுத்தாய்வின் அடிப்படையில் கிடைக்கப்படும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுத்தாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமான ஒன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிக்கை கொள்ளும்படி போதித்தார்கள்.
மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொருளற்றதாகி விடும் எனும் அளவுக்கு இறைத்தூதர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வைப்பற்றி அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறை வெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து இறைத்தூதர்களும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள்
தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமை படுத்தியது எது? அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாக உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.
இதனால்தான், இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைத்தூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு, மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலை வணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்க ரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது.
மனிதன் தர்க்கவாதியாகி விடுகிறான்:
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”" என்று.
36:79. ”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80. ”பசமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை.
45:24. அவர்கள்; ”நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; ”காலம்”" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை”" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ”நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்”" என்பது தவிர வேறில்லை.
ஒரு நாள் வரும் அன்று உலகம் அனைத்தையும் இறைவன் அழித்துவிடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய நாளின் துவக்கமாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண் பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீமைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படுவர். மனிதனின் ஆத்மீகத் தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன் மறுமை வாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப்பின் வாழ்வு இல்லையென்றால் இறை நம்பிக்கை என்பது அர்த்தமற்றதாகிவிடும். அப்படியே ஒருவன் இறைவனை நம்பினாலும் நியாயமற்ற இறைவனைத்தான் நம்ப வேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல.
நிச்சயமாக இறைவன் நீதமிக்கவன். இவ்வுலகில் வரை முறையின்றி கொடுமை புரிந்தவர்கள், அப்பாவி உயிர்களை பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தமது மனோ இச்சைகேற்ப மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சயமாக தண்டிப்பான். மேலும் நியாயத் தீர்ப்பு நாள் வந்தே தீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.
இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்:
34:3. எனினும் நிராகரிப்பவர்கள்; ”(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது”" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பொியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹ{ல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:4. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
34:5. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
இறைவனின் கருணையும் நீதியும் முழு அளவில் மறுமை நாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளை சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமை நாளைப் புறக்கணித்து மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். பாவிகளின் நிலைைைய குறித்து குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
மறுமை வாழ்க்கையை மறுப்பவர்கள் இறை நம்பிக்கையாளர்களையும் நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத் தருவாயில் தங்கள் தவறை உணர்ந்து தங்களுக்கு இவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது புலம்புவார்கள்.
மரணத் தருவாயில் கோரிக்கை நிராகரிக்கப்படும்:
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!”" என்று கூறுவான்.
23:100. ”நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக”" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
23:101. எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
23:102. எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
23:103. ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை காிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கையைப் புறக்கணித்தால் அங்கு அனைத்து பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும். இலஞ்ச ஊழல்கள் பெருகும். இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும்.
ஆத், ஸமூத், ஃபிர்அவ்ன் கூட்டத்தாரின் அழிவு:
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
69:13. எனவே, ஸ_ாில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:15. அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ”இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்”" எனக் கூறுவார்.
69:20. ”நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”"
69:21. ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கயைில் -
69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
69:24. ”சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்”" (என அவர்களுக்குக் கூறப்படும்).
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ”அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ”(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ”என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ”என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”" (என்று அரற்றுவான்).
69:30. ”(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”"
69:31. ”பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:32. ”பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்”" (என்று உத்தரவிடப்படும்).
69:33. ”நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”"
69:34. ”அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை.”"
69:35. ”எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”"
69:36. ”சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”"
69:37. ”குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”"
இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!- அப்துல் சமத்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது.
கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!
கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது அவர் மீது கடமையாக இருப்பதால் அவர்களை தம்மோடு வைத்துப் பராமரிப்பதை கூட்டுக் குடும்பம் என்பதில் சேர்க்க இயலாது என்பதைக் கவனத்தில் கொண்டு இக்கட்டுரையைப் படிக்கவும்.
சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.
யார் அந்நிய ஆடவர்?
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான பெண்கள்)
- தம் கணவர்கள், அல்லது
- தம் தந்தையர்கள், அல்லது
- தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது
- தம் புதல்வர்கள் அல்லது
- தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது
- தம் சகோதரர்கள் அல்லது
- தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது
- தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது
- தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது
- ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்)
- பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்
ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும்,
முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல்-குர்ஆன் 24:31)
மேற்கூறப்பட்ட வசனத்தில் யார் யாருக்கு முன்னரெல்லாம் ஒரு பெண் தம் அழகலங்காரத்தை மறைக்கத் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாகவே கூறிவிட்டான். இவர்களைத் தவிர மற்றவர்கள் எவராயினும் அவர் ஒரு பெண்ணுக்கு அந்நியராவார்; அவர்களிடம் ஒரு பெண் தன் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.. இந்த அந்நியர்களிடமிருந்து ஒரு பெண் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைப்படி தம்மை மறைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.
கணவனின் சகோதரர்களும் அந்நியரே!
மேற்கூறப்பட்ட இறைவனின் கட்டளையில் பட்டியலிடப்பட்டவர்களில் கணவனின் சகோதரர்கள் இடம்பெறவில்லை! எனவே, ஒரு பெண்ணுக்கு கணவனின் சகோதரரும் அந்நியரே என்பதை விளங்கமுடிகிறது. கணவனின் சகோதரர்களுக்கு முன் ஒரு பெண் வருகின்ற போது ஒரு அந்நிய ஆடவர் முன் வரும் போது எவ்வாறு ஹிஜாப் அணிய வேண்டுமோ அவ்வாறே அணிவது அவசியமாகிறது.
ஆனால், இவ்விதியை இன்று பெரும்பாலான முஸ்லிம்கள், ஏன் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதாக கூறக்கூடியவர்கள் கூட பின்பற்றத் தவறிவிடுகின்றனர். ஒரே வீட்டில் சகோதரர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இந்த விஷயத்தில் மிக அலட்சியமாக இருக்கன்றனர். தனித்தனியாக வாழ்வோர்களில் சிலர் கூட இறைவனின் இச்சட்டத்தை (24:31) மீறுகின்றனர்.
இதை விட வெட்கக்கேடு என்னவென்றால் இன்று ஒவ்வொரு வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற சோதனையாகிய தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக அதில் வருகின்ற காட்சிகளான சினிமா, அசிங்கமான காட்சிகளடங்கிய பாடல்கள், சீரியல்கள் மற்றும் இன்னபிற ஆபாசக் காட்சிகளையும் தம் கணவனின் சகோதரர்களுடன் ஒன்றாக உட்கார்ந்துப் பார்க்கின்ற அவல நிலையையும் நம் முஸ்லிம் சகோதரர்களின் கூட்டுக் குடும்பங்களில் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. இது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் அவ்வாறு பலவித மோசமான விளைவுகள் இதற்கு முன்னால் பல ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் (உ.ம். புதுவை பர்வதிஷா நிகழ்ச்சி நாடறிந்த ஒன்று) நம் சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)
இன்று முஸ்லிம்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் மேற்கூறிய எச்சரிக்கையைப் பற்றிய போதிய தெளிவில்லாமல் நம் மக்களில் சிலர் தம் சகோதரரின் மனைவியோடு ஒன்றாக தனிமையில்பயணிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்; இன்னும் மோசமாக, சிலர் இரு சக்கர வாகனத்தில் கூட தம் சகோதரரின் மனைவியை ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்ற போது ஒருவர் உடல் மற்றொருவர் மீது படாமல் இருக்கமுடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும் அப்பெண்ணின் கணவனே அதற்கு சம்மதிப்பது மிகவும் வெட்கக்கேடானது..
சகோதரியின் கணவனும் அந்நியரே!
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் ஊர்களில் பல வீடுகளில் திருமணமானப் பெண்கள் தம் தாயின் வீட்டிலேயே தான் இருப்பர். கணவர் தம் மனைவியின் வீட்டில் பெரும்பாலான நாட்களைக் கழிப்பது வழக்கம்; இன்னும் சிலர் தம் மனைவியின் வீட்டிலேயே கூட தங்கிவிடுவது உண்டு. அதுபோலவே அப்பெண்ணின் சகோதரிகளும் தம் கணவர்மார்களுடன் அவ்வீட்டிலேயே தங்குவதுண்டு. அந்த சமயங்களில் ‘சில’ பெண்கள் தம் சகோதரியின் கணவர் தானே என்ற அதிக உரிமையில் அவர்களின் முன்னிலையில் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஹிஜாப் முறைகளைப் பேணாது அவர்களின் முன்னிலையில் வந்து சர்வ சாதாரணமாக பேசுவதைக் காணமுடிகின்றது. இது இஸ்லாத்தின் பார்வையில் குற்றத்திற்குரிய செயல் என்பதை ஏனோ நம் பெண்கள் உணர்வதில்லை! ஒரு பெண் தம் சகோதரியின் கணவர்களையும் அந்நியராகவே கருதி அவர்கள் முன்னிலையில் முறையான ஹிஜாபுடன் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறிய தாய், பெரிய தாய் மகன்களும் அந்நியரே!
சிறிய தாய், பெரிய தாயின் மகன்கள் ஒரு பெண்ணிற்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்ட அந்நிய ஆண்களாவார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு பெண் வருகின்ற போது முழுமையான ஹிஜாபை பேணியவர்களாகத் தான் வரவேண்டும். மாற்றுமதக் கலாச்சாரம் நம் மக்களிடையே மிக அதிக அளவில் ஊடுவியிருப்பதன் காரணமாக அவர்களை தம் சகோதரர்கள் போல நம்மில் பல பெண்கள் கருதி அவர்களுக்கு முன்னால் தம் சொந்த சகோதரன், தந்தை ஆகியோருக்கு முன்னால் எவ்வாறு வருவார்களோ அதுபோல் வருவது மற்றும் அவர்களுடன் சர்வசாதாரணமாக கைகுலுக்குவது, அரட்டையடிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர். நவ நாகரீகம் என்ற பெயரிலே கணவர்மார்களும் இதற்கு உடந்தையாயிருக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். இவர்களும் அந்நியர்களே என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னால் செல்லும் போதும் ஹிஜாப் பேணப்பட வேண்டும்.
இது போலவே சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியராவார் என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.
அத்தை மகன், மாமன் மகன்களும் அந்நியர்களே!
இவர்களும் ஒரு பெண்ணிற்கு அந்நியர் என்பதை கவனத்தில் கொண்டு இவர்களிடமும் ஒரு பெண் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தற்காலத்தில் நவனாரீக மங்கைகள் எனக் கூறிக்கொண்டு சிலர் இவர்களுடன் ஒன்றாக சுற்றுவது, ஒரே பைக்கில் பயணிப்பது, தனியாக ரெஸ்டாரெண்டுக்குச் செல்வது, இமெயில், சாட்டிங் போன்றவற்றின் மூலம் கிண்டலடித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்கின்றனர். இதுவும் தவறாகும். ஒரு பெண் அந்நிய ஆடவருடன் குழைந்து பேசுவதற்கு எவ்வாறு
தடுக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இவர்களடனும் அவ்வாறு பேசுவதற்கு தடை இருக்கின்றது என்பதை நம் பெண்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)
தவிர்க்கப்பட வேண்டியவைகள்:
இன்று ஃபாஷன் என்ற பெயரிலும், நவநாகரீகம் என்ற பெயரிலும் பலவாறான ஆடைகளை பெண்கள் உடுத்துகின்றனர். அவைகளில் சில பெண்களின் அந்தரங்க அழகுகளை அப்படியே வெளியில் காட்டக்கூடிய மெல்லிய வண்ண ஆடைகள், இறுக்கமான ஆடைகள் போன்றவையாகும். இது தவிர கழுத்து, வயிறு, தொப்புள், முதுகு ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியில் தெரியக்கூடிய சேலைக்கான மிக இறுக்கமான ஜாக்கெட், உடல் அழகுகளை அப்படிய காட்டக்கூடிய மிக இறுக்கமான மிடி, பாவாடை, ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவைகள். இவைகளை இன்று நம் சமுதாய பெண்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர்.
நம்மில் கூட்டுக் குடும்பமாக இருக்கின்ற பலரது வீட்டில் இத்தகைய ஆடையணிந்த பெண்கள், தங்களுக்கு அந்நிய ஆடவர்களான வீட்டிலுள்ள கணவனின் சகோதரர்கள், சகோதரியின் கணவன்மார்கள், சிறிய, பெரிய தாயின் மகன்கள், சிறிய தந்தை மற்றும் பெரிய தந்தையின் மகன்கள், மாமன் மற்றும் அத்தை மகன்கள் ஆகியவர்கள் முன்பாக முறையான ஹிஜாப் இன்றி சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் டீ.வி. பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்வற்றில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு முரணானது என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற முறையான ஹிஜாப் இன்றி ஒரு பெண் அந்நியர்களான இவர்கள் முன்பு வெளி வரக்கூடாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெண்களின் ஆடை எவ்வாறிருக்க வேண்டும்?
அடுத்ததாக பெண்கள் ஆடை விசயத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். குறிப்பாக அந்நிய ஆடவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் இவ்விசயத்தில் மிக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இஸ்லாம் தடை செய்த ஆடை எது என்பதை அறிந்து அவற்றை தவிர்ந்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள், பிற்காலத்தில் வரக்கூடியவர்கள் எவ்வாறெல்லாம் அடையணிவார்கள் என்பதை மிக துல்லியமாக வர்ணித்துள்ளார்கள். அதை இன்று நடைமுறையில் சர்வசாதாரணமாக காணவும் முடிகின்றது.
ஆடை அணிந்தும் அணியாத பெண்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்கள்:
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்” (ஸஹீஹ் முஸ்லிம்).
மற்றொரு நபிமொழியில்:
“நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்
இறைவன் கூறுகிறான் : -
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்” (அல் குஆன் 33:59)
இவ்விசயத்தில் இதுவரை நாம் தவறிழைத்திருப்போமாயின் இறைவனின் பின்வரும் கூற்றுபோல நாம் இதிலிருந்து விலகி, திருந்தி அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவோம்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை பிழைபொறுக்கத் தேடுவோரின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
“முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (அல்-குர்ஆன் 24:31)